பல்லவி
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?
1
எங்கே சுமந்து போகிறீர் இந்தக் காலையில் உந்தன்
அங்கம் முழுதும் நோக, ஐயா, என் ஏகநாதா!
— எங்கே
2
தோளில் பாரம் அழுத்த, தூக்கப் பெலம் இல்லாமல்,
தாழ்ந்து தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர்,
— எங்கே
3
வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர,
— எங்கே
4
தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர,
— எங்கே
5
வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தனை வெல்லவும்,
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்,
— எங்கே
6
வண் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ?
சண்டாளர்களைத் தூக்கும் தலையோடு மேட்டுக்கோ,
— எங்கே
7
மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்கச் சுமையை எடுத்து,
— எங்கே