கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்!
1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் -எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்!
2. நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்- பவ
நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்!
3. தம்பமெனக் கானவனைக்கும்பிடுகிறேன் – நித்திய
சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்!
4. உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் – தொனித்
தோசன்னா ஓசன்னாவென்று கும்பிடுகிறேன்!
5. ஒரே சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்!
6. திருவுருவானவனைக்கும்பிடுகிறேன்- தவிது
சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்!
7. குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் – யூதர்
குருகுல தேவதையைக் கும்பிடுகிறேன்!
8. அருமை இரட்சகனைக் கும்பிடுகிறேன் – என
தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்!